சைக்கிள் கேப்பில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலின். ஜெயகுமார் தாக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பிரிந்திருந்த சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகியவைகளை ஒன்றாக இணைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சைக்கிள் கேப்பில் ஆட்சியை பிடிக்கலாம் என ஸ்டாலின் நினைப்பதாக நிதியமைச்சர் ஜெயகுமார் சற்று முன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
இன்று பாரதிதாசனின் 217வது பிறந்த நாளை அடுத்து சென்னை மெரீனாவில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு அமைச்சர் ஜெயகுமார் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம் பரவும் வகையில் இருந்தவர் பாரதிதாசன். எடப்பாடி, பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரக்கூடாது என்ற செம்மலையின் கருத்து அவருடையதா? அல்லது பன்னீர்செல்வம் அணியின் ஒட்டு மொத்த கருத்தா? என்பதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு காலம் கணிந்து விட்டது. நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் அவர்கள் வரமறுக்கும் காரணத்தை நீங்கள்தான் கேட்டு சொல்ல வேண்டும். ஊரு ரெண்டுப்பட்டால் யாருக்கோ சந்தோஷம் என்பார்கள். மு.க. ஸ்டாலின் சைக்கிள் கேப்பில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறார்.
கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் ஆட்சியாக எங்களது ஆட்சி உள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய ஆட்சி, ஜெயலலிதா உருவாக்கிய ஒன்றரைக் கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எந்த பாதிப்பு வராமல் ஆட்சி தொடரும். இந்த நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல, இதற்கு பின்னும் அ.தி.மு.க ஆட்சியே தொடரும்”
இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்