கேட்டும் கொடுக்காதவர் கருணாநிதி. கேட்காமலேயே கொடுப்பவர் ஜெயலலிதா. அமைச்சர் வேலுமணி

கேட்டும் கொடுக்காதவர் கருணாநிதி. கேட்காமலேயே கொடுப்பவர் ஜெயலலிதா. அமைச்சர் வேலுமணி

velumaniதமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்ட ‘அம்மா கைபேசி’ குறித்து கிண்டல் மற்றும் கேலியுடன் மு.க.ஸ்டாலின் கூறியிருந்ததற்கு பதில் கூறியுள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘கேட்டும் கொடுக்காதவர் கருணாநிதி. கேட்காமலேயே கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா’ என பதிலளித்துள்ளார்.

முதல்வரின் ‘அம்மா கைபேசி’ அறிவிப்புக்கு சமீபத்தில் மு.க.ஸ்டாலின், கைபேசி மட்டும் கொடுத்தால் போதுமா, ‘சிம்கார்டு யார் கொடுப்பார்கள்?’ சார்ஜர்களுக்கு மின்சாரம் யார் கொடுப்பார்கள்?
ரீசார்ஜ் யார் செய்வார்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

” திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்ற கற்பனைக் கனவில் மிதந்து, சொந்த அண்ணனால் மறுதலிக்கப்பட்டு மனம் உடைந்துபோய் தந்தையோடு கோபித்துக் கொண்டு, அந்த கோபத்தை வெளிக்காட்டும் வகையில் ஊர் ஊராக தேசாந்திரம் போய்க் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், போகிற போக்கில் பொல்லாத கருத்துக்களைத் தூவியபடி போய்க் கொண்டிருக்கிறார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிடும் சமுதாய சுய உதவிக் குழுப் பயிற்றுநர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படும் என்று அறிவித்து, அம்மா கைபேசி திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ் அறிவித்ததை அடுத்து, தமிழகத்திலுள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் முதல்வர் ஜெயலலிதா மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் காட்டியதைத் தாங்க முடியாமல், இத்திட்டத்தினை ஏளனப்படுத்தி, திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிரையும் கேவலமாகவும் பேசியிருக்கிறார், மு.க.ஸ்டாலின்.

மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட்டு, புதிய குழுக்கள் அமைப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் துணை புரிகின்ற சமுதாய சுயஉதவிக் குழுப் பயிற்றுநர்களின் பணியை எளிமையாக்கி, அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் அம்மா கைபேசிகள் வழங்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.

மகளிருக்கு அதிகாரம் அளிக்கப்படுவதை ஒரு போதும் விரும்பாதவர் ஸ்டாலின். அதனால் தான், மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அம்மா கைபேசி வழங்கும் திட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கேலியும் கிண்டலும் செய்து

‘சிம்கார்டு யார் கொடுப்பார்கள்?’

சார்ஜர்களுக்கு மின்சாரம் யார் கொடுப்பார்கள் ?

ரீசார்ஜ் யார் செய்வார்கள் ?

என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிம்கார்டு இல்லாமல் கைபேசி வேலை செய்யாது என்பதும் செல்போன் வழங்குவது என்றாலே சிம்கார்டும் சேர்யதுதான் என்பதும், சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும்.

இருந்தாலும், மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் சிறு பிள்ளைக்கும் கீழாக இப்படிக் கேட்கக் கூடும் என்பதால்தான், சிறப்பு மென்பொருளுடன் கூடிய கணினி மயமாக்கப்பட்ட கைபேசி என்று முதல்வர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

சிம்கார்டு இல்லாமல் எப்படி கணினிமயம் ஆகும் என்ற அடிப்படை சிந்தனையின்றி கேள்வி கேட்கும் ஸ்டாலினுக்கு இன்னொன்றும் கூற விரும்புகிறேன். முதல்வர், யானையே வாங்கித் தந்திருக்கிறார்கள், அதை கட்டுவதற்கு சங்கிலி வாங்கித் தராமல் போய் விடுவார்களா? என்பதை சுய சிந்தனையுடன் ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கைபேசியுடன் சிம்கார்டையும் வழங்கி, சிறப்பு மென்பொருள் வாயிலாக சுய உதவிக் குழுக்கள் கூட்டம் நடத்துதல், உறுப்பினர் வருகை பதிவு செய்தல், சேமிப்பு, உட்கடன் வழங்குதல், கடன் திரும்பச் செலுத்துதல் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் மற்றும் சிம்கார்டை ரீசார்ஜ் செய்தல், மாதாந்திர இணைப்புக் கட்டணம் ஆகியவற்றுக்கான செலவினத்தையும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்க வழிவகை செய்துள்ளார். எனவே, இதைப் பற்றி மு.க.ஸ்டாலின் கவலைப்படத் தேவையில்லை. கேட்டும் கொடுக்காதவர் கருணாநிதி. ஆனால் கேட்காமலேயே கொடுப்பவர் முதல்வர் ஜெயலலிதா” என்று வேலுமணி  தெரிவித்துள்ளார்.

Leave a Reply