பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு ரஷ்யாவிற்கு திரும்பிக்கொண்டிருந்த விமானத்தை சுட்டு வீழுத்துவதற்கு பதிலாக மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிரேசில் நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அதிபர் புதின் வந்து கொண்டிருந்தார். அவர் திரும்பி வந்துகொண்டிருந்த விமானத்தை தாக்க உக்ரைன் ஆதரவாளர்களின் படை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அந்த ஏவுகணை குறிதவறி மலேசியா விமானத்தின் மீது தாக்கியதால் அதிலிருந்த 295 அப்பாவி பயணிகளும் மரணம் அடைந்துவிட்டதாக ரஷ்யாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிபரை கொலை செய்ய நடந்த இந்த முயற்சியால் ரஷ்யா மற்றும் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்த தகவலை உக்ரைன் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து பிரிந்து தனிநாடாகிய உக்ரைனில் இருந்து சமீபத்தில் கிரிமியா என்ற மாகாணம் ரஷ்யாவுடன் இணைந்தது. இன்னும் சில மாகாணங்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கும், உக்ரைன் அரசுக்கும் இடையே கடும்போர் சில மாதங்களாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.