கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த மாதம் 8 ஆம் தேதி இரவு மாயமானது. இந்த விமானத்தில் சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் இருந்தனர். இவர்கள் மூவரின் கதி என்ன ஆயிற்று என்று கடந்த ஒரு மாதகாலமாக தெரியாத நிலையில் அவர்களுடைய குடும்பத்தினர் கடும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் காணாமல் போன டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில் விமானத்தின் கருப்பு பெட்டியும் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. காணாமல் போன விமானத்தின் பாகங்கள், கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் இருந்து 16.5 கடல் மைல் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் சிதன்சு கர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”ஒலிம்பிக் கேன்யன், ஐ.என்.எஸ். சிந்துத்வஜ் ஆகிய இரு கப்பல்கள் மூலம் கடலில் விமான பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பாகங்கள் கடலுக்கு அடியில் 950 மீட்டர் ஆழத்தில் கிடக்கிறது. அதேபோல் அந்த விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
இந்நிலையில், கடலுக்கு அடியில் 922.76 மீட்டர் ஆழத்தில் கிடந்த கருப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் மீட்டனர். அந்த புகைப்படத்தையும் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. சர்மா கூறுகையில், ”அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட தேடுதல் பணி காரணமாக குறுகிய காலத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இந்த பெட்டி இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை சேகரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், விமானத்தில் பயணம் செய்த விமானிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் குறித்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்” என்றார்.