சென்னை அருகே காணாமல் போன விமானம் இலங்கை கடல்பகுதியில் விழுந்ததா?

flightஇந்திய கடற்படைக்கு சொந்தமான  ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி ஆம்லா ஆபரேஷன் ஒத்திகையின்போது இரவு 9.23 மணிக்கு திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

விமானம் காணாமல் போய் ஒருமாதம் ஆகியும் இன்னும் அந்த விமானம் குறித்து எந்தவொரு தகவல்களும் கிடைக்கவில்லை. விமானத்தின் கருப்புப்பெட்டியில் இருந்து ஒரு மாதம் வரை மட்டுமே சிக்னல்கள் வெளிவரும் என்பதால் தற்போது அந்த நம்பிக்கையும் பொய்த்துவிட்டது.

விமானத்தை கண்டுபிடிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என விமானத்தில் இருந்த விமானிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் விமானம் இலங்கை நாட்டின் கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதுகுறித்து இலங்கை அரசிடம் இந்திய கப்பற்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த விமானி சுபாஷ் சுரேஷ் அவர்களின் தாயார் பத்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: ‘‘விமானம் காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது. இதுவரை விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி சேற்றுக்கு அடியில் சிக்கியிருப்பதால் அதில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர். மேலும், அந்தப் பெட்டியில் இருந்து ஒரு மாதம் வரைதான் சிக்னல் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே விமானத்தைக் கண்டு பிடிக்கும் பணியில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்.

மத்திய அரசு விமானத்தைக் கண்டுபிடிக்க இதுவரை வெளிநாடுகளின் உதவியைக் கோரவில்லை. அத்துடன், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒலிம்பிக் கேன்யான் கப்பலை, தேடும் பணியிலிருந்து இவ்வளவு சீக்கிரம் விடுவித்திருக்கத் தேவையில்லை. மேலும், மத்திய அரசோ, பாதுகாப்புத் துறையோ இதுவரை எங்களைத் தொடர்பு கொண்டு இவ்விஷயம் குறித்து பேசவில்லை.”

இவ்வாறு பத்மா வருத்தத்துடன் கூறினார்.

Leave a Reply