விவாகரத்து என்ன கடையில் கிடைக்கும் பொருளா? மாயமான பவித்ராவிடம் நீதிபதி கேள்வி
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சமீபத்தில் நடந்த கலவரத்திற்கு காரணமான பவித்ரா என்ற பெண், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதியிடம் பவித்ரா, தனக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்க அதற்கு நீதிபதி காட்டமாக ‘விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? உடனே வாங்கி தருவதற்கு” என்ற கேட்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாயமான தனது மனைவி பவித்ராவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அவரது கணவர் பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக தனிப்படையினர் பவித்ராவை தேடிவந்தனர். பவித்ராவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர்களின் செல்போன் மூலம் அவர்கள் எங்கு தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்பதை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து பவித்ரா அடிக்கடி அவருடைய தோழியை தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காவல்துறையினர் சென்னை கோயம்பேட்டுக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு பவித்ராவை மீட்டனர். மேலும் பவித்ராவுடன் இருந்த 2 வாலிபர்களையும் காவல்துறையினர் பிடித்தனர்.
இந்நிலையில், பவித்ராவை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். மேலும் பவித்ராவின் கணவர் பழனி, கைக்குழந்தையுடன் ஆஜரானார். அப்போது, தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று நீதிபதிகளிடம் பவித்ரா கோரிக்கை வைத்தார்.
அதனைக்கேட்ட நீதிபதிகள், “விவாகரத்து என்ன கடையில் கிடைக்கும் பொருளா?” என கேள்வி எழுப்பியதோடு, முறையாக கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்துமாறு பவித்ராவுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், ஆம்பூரில் நடந்த உயிரிழப்பு மற்றும் வன்முறை போன்றவை வருத்தம் அளிக்கின்றன என்றும், கணவருடன் பவித்ரா முறையாக குடும்பம் நடத்தியிருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வந்திருக்காது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
திருமணமான பிறகு பெண்ணுக்கு வேறு நபருடன் தொடர்பு ஏற்படுவதால் பிரச்னை எழுகிறது என்றும், இதுபோன்ற சூழலில் பிரச்னையை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
அப்போது, அரசு வழக்கறிஞர், சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.