47 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட பனிச்சரிவில் சிக்கிய நபர்

47 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட பனிச்சரிவில் சிக்கிய நபர்

நேபாள நாட்டில் உள்ள இமயமலையில் மலையேற்ற பயணம் சென்ற தைவான் நாட்டை சேர்ந்த லியாங் ஷெங் யுயே என்பவர் அவரது 19 வயது தோழி லியு சென் சுன் அவர்களுடன் மலையேறி கொண்டிருந்தபோது எதிர்பாராமல் வீசிய பனிப்புயலில் சிக்கி திசைமாறினர். பனிப்புயல் நின்றவுடன் அவர்கள் இருந்த இடத்தில் இருந்து சரியான பாதைக்கு செல்ல வழி தெரியாமலும், மற்றவர்களின் உதவி கிடைக்காமலும் திண்டாடினர்.

இந்நிலையில் கையில் இருந்த உணவு காலியாகிவிட்ட நிலையில் நதியில் ஓடும் தண்ணீரை மட்டுமே குடித்து ஒருசில நாட்கள் சமாளித்தனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக இவர்களிடமிருந்து தகவல் ஏதும் கிடைக்காததால், இவர்களது பயணத்தை திட்டமிட்டு கொடுத்த ஆசிய மலையேற்ற அமைப்பினர் ஹெலிகாப்டர் மூலம் தேடத் தொடங்கினர்.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஒருவழியாக லியாங் மற்றும் லியு ஆகியோரை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக லியாங்கின் தோழி லியு சடலமாகத்தான் மீட்கப்பட்டார்.

போதிய உணவு இல்லாமல் மூன்று நாட்களுக்கு முன்னர் லியு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது சடலத்துடன் மூன்று நாட்களாக லியாங் செய்வதறியாது திகைத்து வந்துள்ளார். லியாங் மற்றும் லியு சடலத்தை மீட்டு தலைநகர் காத்மண்டு வந்து சேர்ந்த மீட்புக் குழுவினர், லியாங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

30 கிலோ எடை குறைந்த நிலையில், கால் பாதங்கள் புழுக்கள் அரித்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக தோழியை பறிகொடுத்துவிட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லியாங் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply