மிஸோரம் மாநில கவர்னர் அஜீஸ் குரேஷி நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். மத்திய பாஜக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்த அவர், தன்னை கவர்னர் பதவியில் இருந்து நீக்க முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டியும் அதை தடுத்து நிற்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்நிலையில் மத்தியில் ஆட்சி புரியும் பாரதிய ஜனதா அரசு அவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இவரது பதவிக்காலம் வரும் 2017ஆம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “மிஸோரம் ஆளுநர் பதவியில் இருந்து அஜீஸ் குரேஷி நீக்கம் செய்யப்படுகிறார்; மிஸோரம் மாநிலத்துக்கு புதிதாக ஆளுநர் நியமிக்கப்படும் வரை, அப்பதவியை கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கவனிப்பார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பதவியேற்ற ஒன்பது மாதங்களில் மிஸோராம் மாநிலத்தில் ஆறு கவர்னர்கள் பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் வி. புருஷோத்தமன், கமலா பெனிவால், கே. சங்கரநாராயணன், வி.கே. துக்கல், கே.கே. பால்,குரேஷி ஆகிய ஆறு பேர் கடந்த ஒன்பது மாதங்களி மிசோராம் மாநிலத்தில் கவர்னராக பணிபுரிந்தார்கள்.