திமுகவின் தென்மண்டல செயலாளரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நேற்று திடீரென திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கட்சியில் குழப்பம் விளைவிக்க முயன்றதாகவும், திமுகவுடன் கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமை குறித்து தேவையில்லாத விமர்சனங்கள் செய்து கூட்டணி ஏற்படுவதை குலைக்க முயற்சித்த காரணங்களினாலும் அழகிரி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக க.அன்பழகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
அழகிரி நீக்கம் குறித்து திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கையில் ‘திமுகவில் குடும்ப அரசியல் நடக்கிறது என்ற அவப்பெயர் இந்த நடவடிக்கையின் மூலம் நீங்கிவிட்டது என்றும், அழகிரி நீக்கத்தால் திமுக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நீக்கம் கருத்து தெரிவித்த அழகிரி ‘கட்சியின் சொத்துக்களை ஒரு சிலரே கைப்பற்ற நினைக்கின்றார்கள் என்றும், தமது நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த வீரமணி ஒரு அரசியல் வியாபாரி என்றும், கூறியுள்ளார். அழகிரியின் நீக்கத்தால் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.