தலைமைச் செயலகத்தில் ஓர் அரசாங்கம், ராஜ்பவனில் ஓர் அரசாங்கம்: மு.க.ஸ்டாலின்
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் திடீர் திடீரன ஆளுனர் ஆய்வு செய்து வருவது குறித்து திமுக தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சமீபத்தில் ஆய்வு செய்ய வந்த ஆளுனருக்கு கருப்புக்கொடி காட்டியதால் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
“மாநில உரிமையை காக்கும் தி.மு.கழகத்தின் போராட்டத்திற்கு, மாண்புமிகு தமிழக ஆளுநர் மிரட்டும் தொனியில் “விளக்கம்” என்ற பெயரில் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மாநில உரிமை மீறலை எதிர்க்கும் துணிவு அதிமுகவுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால், திமுக அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
அரசியல் சட்டங்களைப் பற்றி பேசும் தமிழக ஆளுநர் அவர்கள், தலைமைச் செயலகத்தில் ஓர் அரசாங்கம், ராஜ்பவனில் ஓர் அரசாங்கம் என “இரட்டை அரசாங்கம்” நடத்துவதற்கு நிச்சயம் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை என்பதையும் அறிந்திருப்பார்கள் என்று பெரிதும் நம்பகிறேன்.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் செய்ய வேண்டிய அரசியல் பணிகளை “ஆய்வு” என்ற பெயரில் செய்து அரசியல் ரீதியாக உதவுவதையும், இந்த ஆய்வு பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அரசியலுக்காக நடப்பது என்ற அடிப்படை உண்மையையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்”.என்று கூறியுள்ளார்.