ஸ்டெர்லைட் ஆலை மூடல் நடவடிக்கையை குறை சொல்லும் ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலை மூடல் நடவடிக்கையை குறை சொல்லும் ஸ்டாலின்

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நேற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. காலதாமதமான நடவடிக்கை என்றாலும் இந்த அரசாணையை பெரும்பாலான அரசியல்வாதிகளும், தூத்துகுடி மக்களும் வரவேற்றனர். திமுகவில் உள்ள கனிமொழி உள்பட ஒருசில தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். ஆனால் இந்த ஆணையை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூடல் பற்றி அமைச்சரவையை கூட்டி அரசாணை பிறப்பிக்க வேண்டும்; முதல்வர் கண்துடைப்பு நாடகம் நடத்துவதை கைவிட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் முதலமைச்சருக்கு உண்மையிலேயே நல்லெண்ணம் இருக்கிறது என்றால் உரிய சட்டமுறைகளின் படியும், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டியும் ஆலையின் பாதிப்புகளை அரசு ஆணையில் பட்டியலிட்டு உத்தரவிடுவதே உரிய தீர்வாக அமையும். 2013ல், நாங்கள் ஆலையை மூடுவது போல் மூடுகிறோம் நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள் என்ற கண் துடைப்பு நாடகத்தை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் நடத்தியதை போல், இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் சொல்வது போல் அமைச்சரவையை கூட்டி ஆணையை பிறப்பித்தாலும் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவது நீதிமன்றத்தின் உத்தரவில் தான் உள்ளது.. எனவே இப்போதைக்கு தமிழக அரசின் ஆணை நீதிமன்ற உத்தரவு வரும் வரை மூட வாய்ப்பாக உள்ளது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply