சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின் கார் பரிசோதனை. திமுகவினர் அதிருப்தி
திமுக எம்.எல்.ஏக்களின் சஸ்பெண்ட் காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வருகை தந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றும் இன்றும் திமுக எம்.எல்.ஏக்களின் கார்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் காரும் தப்பவில்லை. ஏற்கனவே நேற்று சட்டசபைக்கு வந்த ஸ்டாலின் கார் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அவருடைய காரை போலீஸார் கடுமையாக பரிசோதனை செய்தனர்.
சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனை குறித்து பேச வரும் எதிர்க்கட்சி தலைவரின் காரை போலீஸார் தீவிரவாதிகளை போல் பரிசோதனை செய்வது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஸ்டாலின் இந்த பரிசோதனைக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.