சருமப் பிரச்னைக்கு மொபைல் போனும் ஒரு காரணமா?
ஒவ்வொரு மனிதனுக்கும் தோற்றத்துக்கான பிரத்யேக அடையாளம் தருவது உடலின் மிக பெரிய உறுப்பான தோல். இந்த நவீன யுகத்தில் தேவையற்ற செயல்களால், சருமம் தினமும் அதிக அளவில் பாதிப்படைந்து வருகிறது. இதில் பெண்களுக்கு ஏற்படும் அதிக சரும பிரச்னைகளுக்கு காரணமாக உருவெடுப்பது மொபைல் போன்!. கடந்து மூன்று வருடங்களுக்கு முன்புவரை மொபைல் அடிக்ஷனில் ஆண்கள் தான் முன்னிலையில் இருந்தார்கள். இன்று ஆண்களுக்கு இணையான அளவில் பெண்களும் மொபைலுக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஒருபக்கம் அழகுசாதான பொருட்களையும், மறுபக்கம் தொழில்நுட்பம் மூலமாகவும் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டு வருகிறது. ஆரோக்கியம் இருந்தால் தானே அழகு தானே மிளிரும். எனவே பெண்கள் தங்கள் சருமத்தைப் பாதுகாக்க பல வழிகளை மேற்கொள்கின்றனர்.
சரும பிரச்னைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் ஒரு முக்கிய காரணமாக செல்போன் மாறியிருக்கிறது என்கிறார் தோல் சிகிச்சை மருத்துவர் அமுதா, “அதிகமாக போனில் பேசுவர்களின், காது ஓரங்களில் உராய்வு ஏற்படும். இது அரிப்பாக மாறி கருப்பாக மாறும். அதில் இருந்து வரும் வெப்பத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் வருகிறது. அதிக நேரம் முகத்தோடு ஒட்டி வைத்து பேசுவதால் அதிகபடியான பருக்களும் வந்துக்கொண்டே இருக்கும்.
மொபைல் அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது. சரியான தூக்கம் இல்லாதபோது ஹார்மோன்கள் தான் பாதிக்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் ஆஸ்ட்ரோஜென் (Oestrogen) அளவுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தோலிலும் ஏற்படுகின்றன.
ஆஸ்ட்ரோஜெனின் அளவு குறையும்போது, புதிய தோலை உருவாக்கும் செல்களின் உற்பத்தி குறைகிறது, இதன் மூலம் சருமப் பகுதி கடினப்பட்டு விடுகிறது. இதனால் சரும பகுதிகளில் போதுமான அளவு தண்ணீர், உறுதித்தன்மை மற்றும் நீள் தன்மை ஆகியவற்றை பராமரிக்க முடியாமல் போய் விடுகிறது.’’ என்னும் அமுதா, மேலும் சில கருத்துகளையும் பகிர்கிறார்.
‘’தினசரி வாழ்க்கையில் செல்போனை பல இடங்களில் வைத்து எடுக்கும்போது அதில் பல லட்சகணக்கான பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கிறது. நாம் போனை பயன்படுத்தும்போது, சருமத்தில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் அலர்ஜிகள் ஏற்படும். போனை கையிலே வைத்திருக்க முடியாது. அதனால் கண்ட இடங்களில் எல்லாம் போனை வைத்து எடுப்பதை தவிர்த்தால் போதும்.
மேலும் நமது தோல் மிகவும் மென்மையானது. அதிக முறை வெந்நீரில் குளித்தால் கூட தோல் பகுதி சிவந்துவிடும். அல்லது வறண்டு பலவீனமாக மாறி போகும். இப்படி வெதுவெதுப்பான நீர் கூட நமது தோலை சேதப்படுத்தும் என்றால் ஆரோக்கியத்தின் மீது எவ்வளோ கவனமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!.