மோடி-கமல் சந்திப்பு திடீர் ரத்து. பெரும் பரபரப்பு
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரத்திற்கு நரேந்திரமோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய்யை சந்தித்தார். இந்நிலையில் இன்று கோவை வரும் பிரதமரை நடிகர் கமல்ஹாசன் சந்திப்பார் என்று பாஜக வட்டாரங்களில் கூறப்பட்டது. மேலும் இந்த சந்திப்புக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த சந்திப்பு ரத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தன்னை சந்திக்க விரும்புகிறார் என்றதும் உடனே ஒப்புக்கொண்ட கமல், தான் மட்டும் தனியாக சந்திக்க விரும்பவில்லை என்றும் நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் சந்திக்க விரும்புவதாகவும் கமல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் தரப்பில் இருந்து கமலுடன் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படும் என்று கூறியதால் கமல் இந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கமலஹாசன் மட்டும் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தால் வழங்கப்பட்டிருக்கும். அவர் நடிகர் சங்கத்துக்காக நேரம் கேட்டார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைப்புகளுக்கு மட்டுமே மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படுகிறது. அதனால், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டது” என கூறினார். நடிகர் சங்கத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் கமலஹாசன் நேரம் கேட்டு, இறுதியில் அது மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.