.நிதீஷ், லாலு காட்டாட்சியால் பீகார் நாசமடைந்துவிட்டது. மோடி குற்றச்சாட்டு

.நிதீஷ், லாலு காட்டாட்சியால் பீகார் நாசமடைந்துவிட்டது. மோடி குற்றச்சாட்டு
modi
பீகார் சட்டசபை தேர்தலின் 4வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று பிரதமர் மோடி, ஐந்தாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் முன்னாள் பீகார் முதல்வர்களான லாலு மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கி பேசினார். இருவரும் பீகார் மாநிலத்தில் காட்டாட்சி செய்து மாநிலத்தையே சீரழித்துவிட்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.

நேற்று மாலை மதுபானி, காத்திஹார் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

பிகார் மாநில மக்களாகிய நீங்கள் புத்திசாலிகள், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்கள், கடினமாக உழைக்கக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். எனவே, இந்த மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என இந்த மாநில மக்கள் மீது குறிப்பாக இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.

நிதீஷ் குமார், லாலு பிரசாத் ஆகிய இருவரின் காட்டாட்சியால், பிகார் மாநிலம் ஏற்கெனவே நாசமடைந்து விட்டது. இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்து, இவர்கள் தற்போது மாந்த்ரீகத்தை நாடியுள்ளனர்.

இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த மாநிலத்தையும், மாநில மக்களையும் அடியோடு அழித்து விடுவார்கள் என்றும் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினார் மோடி.

பீகாரில் நவம்பர் 5ஆம் தேதி 5வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்பின்னர் நவம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. அன்று இரவே அனேகமாக பீகாரின் அடுத்த முதல்வர் யார்? என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply