பாரத பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி, தனது சகோதரரை எதிர்த்து நடத்திய போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கும் மோடியின் சகோதரர்ர் நியாய விலைக்கடை ஊழியர்களின் கோரிக்கைக்காக மும்பையில் இன்று மிகப்பெரிய போராட்டம் நடத்தியுள்ளார். இந்த போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு கொடுத்துள்ளனர். தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரகலாத் மோடி, தனது சகோதரர் மோடி உள்பட அரசு ஊழியர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த போராட்டத்தின் போது பிரகலாத் மோடி பேசியதாவது” நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு தலா 1,000 கார்டு தாரர்களை ஒதுக்க வேண்டும் என்றும், கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அரசும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தலின் போது 75,000 நியாயவிலை கடை ஊழியர்கள், விற்பனையாளர்கள் ஒன்று திரண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக வெற்றிக்காக வேலை செய்தோம். இதனால் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை கைப்பற்றியது.
ஆனால், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து நாங்கள் வேலை செய்ததால் அந்த கட்சி படுதோல்வி அடைந்தது. 70 தொகுதிகளில் பாஜகவால் 3 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இனியும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வர இருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக கண்டிப்பாகத் தோல்வியை தழுவும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரகலாத் மோடி, அரசு அதிகாரிகள் பற்றி குறிப்பிடும் போது, ‘‘அவர்கள் பெரிய திருடர்கள் நாங்கள் சிறிய திருடர்கள். அவர்களது கொள்கைகள்தான் எங்களைத் திருடர்களாக மாற்றுகிறது’’ என்று கடுமையாக சாடினார்.
பிரதமர் மோடியை எதிர்த்து சகோதரரே போராட்டம் நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது