மக்களை மட்டுமல்ல. கடவுளையும் முட்டாளாக்கும் வித்தை தெரிந்தவர் மோடி. லாலு
பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ள நிலையில் முன்னாள் பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ‘மக்களை மட்டுமல்ல அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி’ என பிரதமரை கடும் விமர்சனம் செய்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் வர்த்தக சபையினரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லாலு பிரசாத் யாதவ் பேசியபோது”கடந்த 15 மாத பா.ஜ.க. ஆட்சியில் ஒரே ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினார்கள் என்பதற்கான ஆதாரத்தை மோடி அரசால் காட்ட முடியுமா? பீகாருக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதில் புதியதாக எதுவும் இல்லை. பழைய திட்டங்களையே திரும்ப கூறி மோடி மக்களை ஏமாற்றுகிறார். மோடி அனைத்து மக்களை மட்டுமல்ல, அந்த கடவுளையும் முட்டாளாக்கும் வித்தை தெரிந்தவர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாருக்கு சிறப்பு நிதியை அறிவித்துள்ள மோடி, அடுத்த 3 மாதங்களுக்கு இதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருப்பார். அடுத்து வரும் பொது நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும் போது, அவரது வாக்குறுதிகள் காற்றில் காணாமல் போய்விடும். அதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த மதவாத சக்திகளுக்கு இடம் அளிக்காமல் அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடக்க நாம் போராட வேண்டும்.
என் உயிர் இருக்கும் வரை மதவாத சக்திகள் பீகாரை ஆட்சி செய்ய விடமாட்டேன். பகவான் கிருஷ்ணரை போல், நானும் இந்த மதவாத சக்திகளை அழிப்பேன். நான் ஏழைகளுக்காகவும், எளியவர்களுக்காகவும் குரல் கொடுப்பதால், அவர்கள் என் ஆட்சியை காட்டுமிராண்டி ஆட்சி என்கின்றனர். அவர்கள் பயப்படுவதால் அப்படி கூறிகின்றனர். அவர்களின் எண்ணங்களை, சாதி பிரிவினைகளை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.