கழிவறை கட்டுதல், கிராமங்களை தத்தெடுத்தல் போன்றவை என்னுடைய மனதில் உதித்த திட்டங்கள் இந்த திட்டங்களை மோடி காப்பியடித்து விட்டார் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து உத்தரபிரதேசத்தில் நேற்று பேட்டியளித்த முன்னாள் உ.பி முதல்வர் முலாயம் சிங், ”கடந்த 1990ஆம் ஆண்டே கழிவறை கட்டும் திட்டத்தை நான் தொடங்கி வைத்ததோடு, அப்போதே கிராமங்களையும் நான் தத்தெடுத்தேன் முறையை கொண்டு வந்தேன். ஆனால், மோடி எனது திட்டங்களையெல்லாம் காப்பியடித்து விட்டார். அவர் பேசுவதை நான் ஏற்கனவே செய்து விட்டேன் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் முதலில் ஏழ்மையை அகற்றுங்கள். ஏழ்மையை அகற்றினால் குப்பைகள் தானாக மறைந்து விடும். மேலும், நாம் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை கொண்டிருக்க வேண்டும். பகையை குறைக்க வேண்டும். எனவே, மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் நல்லது என நான் நினைக்கிறேன்” என்றார்.
மேலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் தலா இரண்டு கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.