சட்டசபை தேர்தல் நடைபெறும் சத்தீஷ்கார் மாநிலத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். முதல்-மந்திரி ராமன்சிங்கின் சொந்த ஊரான கவர்தா உள்ளிட்ட இடங்களில் நடந்த பிரசார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள பெமேத்ரா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை நேரடியாக தாக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஊழலில் காங்கிரஸ் கட்சி முனைவர் (பி.எச்டி) பட்டம் பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமை ஆகிவிட்டது. எனவே காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்.
அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கப்போகிறது. தேர்தலில் தோற்று விடுவோம் என்பதால்தான் கருத்துக்கணிப்புகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
சோனியா அம்மையாரும், இளவரசர் ராகுலும் இங்கே வந்தனர். இந்த மாநிலத்துக்கு ஏராளமான உணவு தானியங்களும், நிதியும் கொடுக்கப்பட்டதாக கூறினார்கள். நீங்கள்(மக்கள்) என்ன பிச்சைப் பாத்திரம் ஏந்திக்கொண்டா நிற்கிறீர்கள்? காங்கிரஸ் என்ன பேசிக்கொண்டிருக்கிறது?
நான் இளவரசரை கேட்க விரும்புகிறேன். மாநிலங்களுக்கு நீங்கள் நிறைய நிதி கொடுத்தோம் என கூறி வருகிறீர்கள். இந்தப் பணம் என்ன உங்கள் மாமா வீட்டில் இருந்தா வந்தது? (ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியின் பூர்வீகம் இத்தாலி என்பதை குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்) இது மக்களின் பணம் அல்லவா?
அம்மையாரே, உங்களுக்கு உடல் நலமில்லை. கட்சியை இளவரசரிடம் ஒப்படையுங்கள்.
முதல்-மந்திரி ராமன் சிங் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் சத்தீஷ்கார் மாநிலம் முன்னேறி இருக்கிறது. இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சத்தீஷ்கார் அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியால் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயமே இதற்கு காரணம் ஆகும்.
சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றி இருக்கிறதா? பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் நரேந்திர மோடி தாக்கி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நாகரீகத்தின் எல்லையை மீறி நரேந்திர மோடி பேசி வருவதாகவும், தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் கண்ணியத்தை பற்றி அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் கூறினார். தனது தரக்குறைவான பேச்சுக்காக நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.