சீனா செல்வது ஏன்? சமுக வலைத்தளத்தில் மோடி விளக்கம்

modi in chinaகடந்த ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த பாரத பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி சீனாவுக்கு செல்லவிருக்கின்றார். தனது சீனப்பயணத்தின் நோக்கம் என்ன என்பதை அவர் இன்று காலை நாட்டு மக்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் விளக்கியுள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது: ‘வருகின்ற 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை, சீனாவில் சுற்றுப்பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் பயணம், இரண்டு பழங்கால நாகரீக நாடுகள் மற்றும் மாபெரும் வளரும் நாடுகளிடையே நட்புறவை அதிகரிக்கும்.

எனது பயணம், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். ஆசிய கண்டத்தில், ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், செழுமை ஆகியவற்றை வலுப்படுத்தும் என்று கருதுகிறேன். சீன அதிபா ஜி ஜின்பிங், பிரதமர் லீ கேகியாங் ஆகியோருடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த காத்திருக்கிறேன். சீன அதிபரின் சொந்த ஊரான ஜியான் மற்றும் பீஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு செல்வேன்.

ஷாங்காய் நகரில் தொழில்துறை தலைவர்களை சந்திக்கப்போகிறேன். இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். சீனாவைத் தொடர்ந்து, மங்கோலியா நாட்டுக்கும் செல்கிறேன். அந்நாட்டில் ஜனநாயகம் மலர்ந்த வெள்ளி விழாவிலும், நமது ராஜ்ய உறவின் 60 ஆம் ஆண்டு விழாவிலும் கலந்து கொள்ளப்போகிறேன்.

மங்கோலியா, நமது ஆன்மிக நட்பு நாடு ஆகும். ஜனநாயகமும், புத்த மதமும் இரு நாடுகளையும் பிணைத்துள்ளன. மங்கோலியாவுடன், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவை அதிகரிக்கும் வாய்ப்பை ஆராய்வேன். மங்கோலியாவுக்கு அனைத்து துறைகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்”

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply