ஆஸ்திரேலியாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெயரில் `மோடி எக்ஸ்பிரஸ் ` என்ற சிறப்பு ரயில் வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் இருந்து சிட்னி நகரம் வரை 870 கிலோமீட்டர் தூரம் இந்த `மோடி எக்ஸ்பிரஸ் `இயங்கும் என்றும் இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் இந்தியர்கள் பெரும் முயற்சி எடுத்து ஆஸ்திரேலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்தியா – ஆஸ்திரேலிய சமுதாயக் கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் பாலேஸ் சிங் தங்க்கர் ஒரு பேட்டியில் கூறியபோது, “மோடியின் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நாங்கள் இந்த சிறப்பு ரயில் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். நாங்கள். மோடியின் தீவிர ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் மட்டும் 2,95,300 பேர் புலம்பெயர் இந்தியர்கள் வசிக்கிறோம். மோடி, வரும் நவம்பர் 15 ஆம் தேதி பிரிஸ்பன் நகரில் ஜி-20 உலகநாடுகள் மாநாட்டில் பங்கேற்க வருவதை ஒட்டியே இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர், மோடியின் வருகை இந்திய- ஆஸ்திரேலியாவின் உறவைப் பலப்படுத்தும் என்றும், ‘மோடி எக்ஸ்பிரஸ்’ அறிவிப்பு வெளியான 2 நாளில் 21,000 பேர் ஆன்லைன் மூலம் டிக்கெட் கேட்டு பதிவு செய்துள்ளனர் என்றும் கூறினார்.