நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் அவசர அவசரமாக திருத்தம் செய்து, அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளதன் மூலம், பாரதிய ஜனதா அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதனகமான அரசு என்பதை உறுதிப்படுத்திவிட்டதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், மத்திய அரசின் இந்த விவசாயிகள் விரோத சட்டத்திருத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனிஷ் திவாரி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆட்சி நடத்துகிறது என்பதை அடிக்கடி காங்கிரஸ் கட்சி கூறி வருகிரது.
இதை மெய்ப்பிப்பதுபோல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவுற்று ஒரு வாரத்திற்குப் பின்னர் நிலம் கையகப்படுத்துதல் என்ற அவசரச் சட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார். இது குறித்து அடுத்து கூடும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சாவகாசமாக விவாதிக்கப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்திய நிலையில் அவசரச் சட்டங்களை நிறைவேற்றி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமான ஒரு நிலையை மோடி ஏற்படுத்தியுள்ளார். இதை எதிர்த்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது’ என்று கூறினார்.