புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தற்போது புகை பிடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் வயதான 18லிருந்து 25ஆக உயர்த்தவும், பொது இடங்களில் புகை பிடிப்போரின் அபராதத் தொகையை மிக அதிக அளவுக்கு உயர்த்தவும் மத்திய அரசு அதிரடியாக ஆலோசித்து வருகிறது.
புகை பிடிக்கும் பழக்கத்தினால் இந்தியாவில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதாக சமீபத்தில் மத்திய அரசு எடுத்த ஒரு சர்வே அளித்த முடிவு காரணமாக புகையிலைக்கு எதிராக மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகிறது. புகையிலை பயன்படுத்துவதால் இறப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு புகையிலை பயன்பாட்டை மக்கள் கைவிட பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி கடந்த மாதம் மத்திய அரசு சமர்ப்பித்த பொது பட்ஜெட்டில் சிகரெட் மீது 72 சதவீத வரியும், பான்பராக் போன்ற போதை பாக்குகள் மீது 70 சதவீத வரியும், புகையிலை மீது 55 சதவீத வரியும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், புகையிலை பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை என மத்திய அரசுக்கு அறிக்கை வந்துள்ளது.
எனவே முதல்கட்டமாக சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவோரின் வயது வரம்பை 18லிருந்து 25ஆக உயர்த்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேலும் பொது இடங்களில் புகை பிடிப்போரின் அபராதத் தொகையை மிக அதிகளவில் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.