வியட்நாமில் இந்திய பிரதமர் மோடி. 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியட்நாம் நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில் இன்று இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகியுள்ளது.
பிரதமர் பதவியேற்றவுடன் முதல் முறையாக வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு தலைநகர் ஹனோய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு பின்னர், வியட்நாம் விடுதலை போராட்ட தலைவர் ஹோசிமின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார். அந்நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கும் மரியாதை செலுத்தினார்.
அதைதொடர்ந்து, அதிபர் மாளிகையில் வியட்நாம் பிரதமர் நிகுயென் ஜியுன் புக் மற்றும் உயரதிகாரிகளுடன் அந்நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ராணுவம், தகவல் தொழில்நுட்பம் உள்பட 12 புதிய ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையொப்பமிட்டன. வியட்நாமில் ராணுவ பலத்தை அதிகரிக்க 500 மில்லியன் டாலர்களை இந்தியா கடனாக அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். வியட்நாமில் கம்ப்யூட்டர் மென்பொருள் பூங்கா தொடங்க 5 மில்லியன் டாலர் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.