இந்தியாவின் பலவீனமான பிரதமர் மோடி. ராகுல்காந்தி கடும் தாக்குதல்

இந்தியாவின் பலவீனமான பிரதமர் மோடி. ராகுல்காந்தி கடும் தாக்குதல்

rahul gandhiகடந்த சில மாதங்களாக அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி இருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்த் தற்போது  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் வருவதை அடுத்து மீண்டும் சுறுசுறுப்பான அரசியலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அவர் பிரதமரை குறிவைத்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

இதன் முதல்கட்டமாக நேற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “‘மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவிதத்தை நாடு எதிர்கொண்டால், அதைச் சமாளிக்க முடியாத பலவீனமான பிரதமராக மோடி விளங்குகிறார். உள்நாட்டில் பாதுகாப்பு பிரச்னைகள் வந்தால் அவர் நிலைகுலைந்து போய் விடுவார்.

கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காவிமயத்தை புகுத்த முனைப்புக் காட்டுவது, ஹிந்துத்துவா கொள்கையை மறைமுகமாக மக்கள் மீது திணிக்க ஆர்வம் காட்டுவது, ஆர்.எஸ்.எஸ். பின்புலத்துடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீவிரம் காட்டுவது, அகண்ட பாரதம் என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டும் செயலில் ஈடுபடுவது போன்ற தனது தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற மத்தியில் ஆளும் அரசை நரேந்திர மோடி பயன்படுத்துகிறார்.

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு அலட்சியம் காட்டியது. வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அந்த மாநில முதல்வர்களுக்குக்கூட தெரியாமல் “நாகா’ ஆயுதக் குழுவுடன் மோடி அரசு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.

பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. மும்பை தாக்குதல் சம்பவத்தில் தனது நாட்டவருக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறியபோது, அந்த நாட்டு மண்ணில் இருந்துதான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதாரங்களுடன் நிரூபித்தது.

வெளியுறவு அமைச்சர், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதர் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்காமல் வெளிநாடு சென்று திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தானுக்கு சென்று அந்த நாட்டுப் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறுகிறார் மோடி. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளை பொறுப்புள்ள பிரதமர் செய்வாரா?

மோடி நாடு திரும்பிய அடுத்த சில நாள்களிலேயே எல்லையில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத சக்திகள் தாக்குதல் நடத்துகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களில் அந்தத் துறை அதிகாரிகளை செயல்பட அனுமதிக்காமல், “அஜித் குமார் தோவால்’ (தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்) என்ற ஒற்றை மனிதனின் எண்ணங்களை செயல்படுத்தும் பிரதமராக நரேந்திர மோடி திகழ்வது இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்காது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நான் ஏற்க வேண்டும் என்று குரல் பரவலாக எழுப்பப்படுகிறது. இது பற்றி கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும். இந்த ஆண்டுக்குள் காங்கிரஸ் தலைமைக்கு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர். அதன் பிறகு கட்சியில் அமைப்பு ரீதியில் மாற்றம் செய்யப்படும்.”

இவ்வாறு ராகுல்காந்தி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply