பிரபல அமெரிக்கா பத்திரிகை ‘ஃபார்ச்சூன்’ உலகின் சிறந்த நிர்வாக திறமை வாய்ந்த தலைவர்களின் பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார். மேலும் நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி 28-ஆவது இடத்தில் உள்ளார்.
2015-ஆம் ஆண்டின் நிர்வாகம், தொழில் மற்றும் கொடை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 50 உலகத் தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் முதலாவது இடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி 2-ஆவது இடத்திலும் உள்ளனர்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் 3-ஆவது இடத்தையும், போப்பாண்டவர் 4-ஆவது இடத்தையும், நரேந்திர மோடி 5-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். ஃபேஸ்புக் நிறுவன சிஇஓ மார்க் சக்கர்பர்க் 25-ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியல் குறித்து “ஃபார்ச்சூன்’ பத்திரிகை கூறியுள்ளதாவது:
இந்தியாவை தொழிலுக்கு சாதகமான நாடாக மாற்றுவதிலும், மகளிருக்கு எதிரான வன்முறைகளை எதிர்நோக்குவதிலும் உறுதியான நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார். தடைகளைக் கண்டறிந்து, தன்னால் முடிந்த இடங்களில் அவற்றைக் களைவதற்கு அவர் முயற்சிக்கிறார்.
போராளியான கைலாஷ்: கடந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, மலாலாவுடன் பகிர்ந்து அளிக்கப்பட்டதால் கைலாஷ் சத்யார்த்தியின் புகழ் மறைக்கப்பட்டுவிட்டது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக சர்வதேச அளவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் போராடி வருகிறார் என்று “ஃபார்ச்சூன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.