பீகார் தேர்தலில் மோடி மேஜிக் பொய்த்துவிட்டது. பாஜக எம்.பி அதிரடி
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது வெளிப்படையாகவே பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிகார் தேர்தல் முடிவுகள், மோடி மேஜிக் தக்க வைக்க முடியாத ஒன்று என்பதை நிரூபித்துள்ளதாக பாஜக எம்.பி. போலா சிங் தெரிவித்துள்ளதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் தேர்தலில் பாஜக தோல்வி குறித்து ஏற்கனவே மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தலைமைக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா தனது டுவிட்டரில் ‘தோல்விக்கான பொறுப்பை ஏற்பதிலிருந்து நாம் ஓடி விட முடியாது’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தனது டுவிட்டரில் கூறியபோது, “எப்படியாயினும், தற்போது முடிவுகள் வெளிவந்து விட்டன, இழிவான தோல்வி நம்மை வருத்தமடையச் செய்துள்ளது. எனவே பொறுப்பேற்பதிலிருந்து நாம் தப்பிச் செல்ல முடியாது. என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்று நான் கூறியதாக ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டன.
நான் இப்படிக் கூறவில்லை, முதல்வராக வேண்டும் என்ற ஆசை என்னிடம் துளிக்கூட இல்லை. என்னை பிரச்சாரத்துக்கு அழைத்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது, இன்னும் கொஞ்சம் மரியாதையாக இருந்திருக்கும் என்றுதான் கூறினேன். என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள், வாக்காளர்கள் உற்சாகமாக பங்கேற்றிருப்பார்கள், இன்னும் சில தொகுதிகளில் வேறுபட்ட முடிவுகள் கிடைத்திருக்கும். நான் ஒன்றும் ராஜ்யசபா எம்.பி. அல்ல. நான் வெகுஜன மக்கள் திரளின் ஆதரவில் 2 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று எம்.பி.ஆனவன். எனக்கு மக்கள் ஆதரவு என்ற அடித்தளம் உள்ளது.
பிகாரைச் சேர்ந்த எனது நோக்கம், கடமையுணர்வு, கட்சிக்காக ஆற்றிய பணிகள் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டு, என் மக்களுக்காக நான் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. என்னுடைய நண்பர்கள், வாக்காளர்கள், ஆதரவாளர்களைக் கட்சி கைவிட்டது” என்று சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்
பெகுசராய் பாஜக எம்.பி. போலா சிங் இதுகுறித்து கூறியபோது “நாடாளுமன்றத் தேர்தல்களின் போது இருந்த சூழ்நிலை வாக்காளர்கள் மத்தியில் ‘மோடி மேஜிக்’ எடுபட உதவிகரமாக இருந்தது. ஆனால் இந்த தேர்தல் சமயத்தில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. நிலைமைகள் மாறியுள்ளன. எனவே பிகார் தேர்தல் முடிவுகள் மோடி மேஜிக் தக்க வைக்க முடியாத ஒன்று என்பதை நிரூபித்துள்ளது” என்றார்.