தீபாவளி, ஹோலியை விட ரம்ஜானுக்கு அதிக முக்கியத்துவமா? மோடிக்கு அகிலேஷ் பதில்
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆறு கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் நாளை 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களுடைய இறுதிக்கட்ட தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று சமீபத்தில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்த பிரதமர் மோடி, தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளை விட ரம்ஜான் பண்டிகைக்கு மாநில அரசு சார்பில் அதிக மின்சாரம் விநியோகம் செய்து முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் கூறிய உபி முதல்வர் அகிலேஷ், பிரதமர் மோடி மின்சாரப் பிரச்னையை இந்து-முஸ்லீம் பிரச்னையாக மாற்ற முயல்வதாக குற்றம்சாட்டினார். மாநில அரசு யாருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரே மாதிரியான நடவடிக்கையை பின்பற்றுவதாக அவர் உறுதி கூறினார். பொதுமக்களை மதத்தால் பிரிக்க முடியாது என்றும் அவர்களுடைய ஆதரவு சமாஜ்வாதி கட்சிக்கு தான் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.