நவாஸ் ஷரிப்புடன் மோடி சந்திப்பு. இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை

நவாஸ் ஷரிப்புடன் மோடி சந்திப்பு. இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை
nawas and modi

ஆறு நாடுகள் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்து வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷியாவின் உபா நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்த மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. அப்போது தலைவர்கள் இருவரும் இரு நாடுகள் இடையே உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது குறித்து பேச்சு நடத்தினர். மோடி-நவாஸ்ஷெரீப் பேச்சுவார்த்தை முடிந்த பின்பு இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கரும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் அசிஸ் அகமது சவுதாரியும் கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் இரு நாடுகளும் அமைதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய கூட்டுப் பொறுப்பேற்று செயல்படுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், அனைத்து வகையான தீவிரவாத செயல்களையும் அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் தீவிரவாதம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிப்பார்கள். இந்திய எல்லை பாதுகாப்பு படை டி.ஜி மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் டி.ஜி. கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இரண்டு நாடுகளின் சிறையிலும் உள்ள மீனவர்களும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் அடுத்த 15 நாட்களுக்குள் விடுவிக்கப்படும் என்றும் இரு நாடுகளிடையேயும் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவது இருநாட்டு அதிகாரிகளும் உறுதி கொண்டதாகவும் கூறப்படுகிறது.  

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக தீவிரவாதிகளின் குரல் மாதிரிகள் உள்ளிட்ட கூடுதல் ஆதாரங்களை இந்தியா வழங்கும். மேலும் 2016-ம் ஆண்டு நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருமாறு நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார் என அந்த கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply