இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலிமையானதாக மாற்றவும் இந்திய அமெரிக்க நாடுகளின் நட்பு உலக நாடுகளுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கவும் அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இரு தலைவர்களும் சபதம் பூண்டுள்ளனர்.
5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாரத பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் நேற்று இன்று இரவு விருந்தளிக்கப்பட்டது. இந்த விருந்தின்போது பராக் ஒபாமா மற்றும் மோடி ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள இரு தலைவர்களும், இந்தியா – அமெரிக்காவின் நலன்களுக்காக மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உலக நாடுகள் பயனடையும் வகையில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைந்து பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.