சுவிஸ் அதிபருடன் மோடி சந்திப்பு. இந்தியர்களின் கருப்புப்பணம் வெளியே வருமா?

சுவிஸ் அதிபருடன் மோடி சந்திப்பு. இந்தியர்களின் கருப்புப்பணம் வெளியே வருமா?

modiஐந்து நாட்களில் ஐந்து நாடுகள் அரசு முறை பயணம் என்ற திட்டத்துடன் கடந்த சனிக்கிழமை கிளம்பிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான், கத்தார் பயணத்தை முடித்துக் கொண்டு சுவிட்சர்லாந்துக்கு நேற்று சென்றடைந்தார். அந்நாட்டின் ஜெனீவா நகரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து அதிபர் ஜோஹன் ஷ்னைடர் அம்மானை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே வர்த்தகம், முதலீடு, தொழிற்கல்வி, பயிற்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கருப்புப் பணத்தை மீட்கவும், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை தடுக்கவும் இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்ற மோடியின் வேண்டுகோளை சுவிஸ் அதிபர் ஜோஹன் ஷ்னைடர் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் பயனாக விரைவில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தின் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி-ஜோஹன் ஷ்னைடர் சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுவிஸ் அதிபர் கூறியதாவது:

48 உறுப்பினர்களைக் கொண்ட அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைய ஸ்விட்சர்லாந்து ஆதரவு அளிக்கும். அதேபோல இந்தியாவில் இருந்து கருப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்குவதைத் தடுக்கும் அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும். இது தொடர்பாக விவாதிக்க சர்வதேச நிதி விவகாரங்களுக்கான ஸ்விட்சர்லாந்து அரசுத் துறை அதிகாரி வரும் 14-ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார் என்றார்.

இந்த சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது:

கருப்புப் பணத் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்கும், அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள ஆதரவளித்துள்ளதற்காகவும் ஸ்விட்சர்லாந்து அதிபருக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு ஸ்விஸ் நிறுவனங்கள் இந்தியாவில் பல ஆண்டுகளாக நற்பெயருடன் செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளிடையே வர்த்தக, முதலீட்டு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம். ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த அமைப்புடன், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள தொழிற்கல்வி நிலையங்களின் கிளைகளை இந்தியாவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் ஸ்விட்சர்லாந்து முக்கிய இடம் பிடித்துள்ளது. பல்வேறு படப்படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஸ்விட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மின்னணு முறையில் விசா வழங்கும் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டுத் துறையில் கூட இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரங்களான சானியா மிர்ஸா, லியாண்டர் பயஸ் ஆகியோர் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். இந்திய – ஸ்விட்சர்லாந்து உறவில் பல வெற்றிக் கதைகள் உள்ளன’ என்று கூறினார்.

Leave a Reply