பிப் 9ஆம் தேதி சென்னையில் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிப்ரவரி 9ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார். வண்டலூர் விஜிபி மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடி கடந்த செப்டம்பர் 26ஆம்தேதி திருச்சியில் நடந்த பிரமாண்டமான இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டதுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பிரதமர் வேட்பாளர் மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்தநாள் அன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கோவா மாநிலம் பனாஜியில் ஆரம்பிக்க உள்ள பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகிறார். அதன் பின்னர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதன் ஒரு கட்டமாக சென்னையில் பிப்ரவரி 9ஆம் தேதி பிரமாண்டமான கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக சென்னை வண்டலூர் அருகே உள்ள விஜிபி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் நடைபெறுவதற்குள் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்றும், அந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மோடி அலைவீசுவதால் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது என்றும் மோடியை பிரதமர் ஆக்கியே தீருவோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply