குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பிரதமர் மோடி கோயில்’ திறப்பு விழா திடீரென ரத்து செய்யப்படுவதாக அக்கோயிலை கட்டுவதற்கு பெருமளவு நிதியுதவி செய்த ஓம் யுவா இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் உந்தாத் இன்று அறிவித்துள்ளார். இந்த கோயிலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து திறப்பு விழா நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநில ராஜ்கோட்டில் கோத்தாடிய என்ற கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சிலையுடன் கூடியகோயில் எழுப்பப்பட்டு அதற்கு விரைவில் திறப்புவிழா நடத்தவும் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த தகவலை நேற்று பத்திரிகைகளின் மூலம் அறிந்து கொண்ட பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, தனக்கு கோயில் கட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமரின் வேண்டுகோளை அடுத்து ‘மோடி கோயில்’ திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக அக்கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உதவிய ஓம் யுவா இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் உந்தாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரமேஷ் உந்தாத் “கோயில் திறப்பு விழா இன்றைக்கு நடைபெறாது. பிரதமர் தனது ட்விட்டரில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு கோயில் எழுப்புவது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை நாங்களும் ஆமோதிக்கிறோம். எனவே கோயில் திறப்பு விழாவை ரத்து செய்கிறோம். மோடியின் சிலை அங்கிருந்து அகற்றப்படும். இந்த கோயில் பாரத மாதாவுக்கான கோயிலாக மாற்றப்படும். மோடிக்கு கோயில் திறக்கவில்லை எனினும் அவர் எங்களுடைய இதயங்களில் என்றென்றும் கடவுளாக இருப்பார்’ என்று கூறினார்.