ஃபேஸ்புக் தலைமையகத்தில் பிரதமர் மோடி. செப்.27ல் உரையாற்றுகிறார்.
கடந்த வருடம் பாரத பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, பொதுமக்களிடம் தன்னுடைய கருத்துக்கள் உடனடியாக போய் சேரவேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களின் மூலம் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஃபேஸ்புக் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். இந்நிலையில் உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடியின் அடுத்த சுற்றுப்பயணம் ஃபேஸ்புக்கின் தலைமையகம் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃ பேஸ்புக் தலைமையகத்துக்கு பிரதமர் மோடி இம்மாதம் 27ஆம் தேதி செல்லவுள்ளதாகவும், அச்சமயம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் உடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் பின்னர் இருவரும் இணைந்து டவுன்ஹால் நிகழ்ச்சியில் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அவர்கள் நேற்று உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்திய பிரதமர் ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வருகை தந்து டவுன்ஹால் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனால் மோடியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அனுப்புங்கள்” என கூறியுள்ளார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்த அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மோடி வரும் 27ஆம் தேதி ஃபேஸ்புக் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகர் அருகேயுள்ள மென்லோ பார்க்கிற்கு செல்கிறார். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு டவுன் ஹால் நிகழ்ச்சியில் ஃ பேஸ்புக் பயன்படுத்துபவர்களிடம் கலந்துரையாடுகிறார்.