பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள் என நரேந்திர மோடி நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, ” இங்கு திரளாக கூடி இருக்கும் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒன்றை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 16ஆம் தேதிக்குப் பிறகு, நமது நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் அனைவரும் மூட்டை, முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு தங்களது நாட்டை நோக்கி வெளியேற வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
வாக்கு வங்கிக்காக வங்கதேசத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மம்தா பானர்ஜி தாய்நாட்டிற்கு துரோகம் செய்கிறார். பிகாரில் இருந்தும், ஒடிஸாவில் இருந்து இங்கு வரும் அப்பாவி மக்களை விரட்டியடிக்கும் மம்தா பானர்ஜி வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை தாராளமாக அனுமதிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா பானர்ஜி தாய்நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். மோடியின் பேச்சுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.