சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று முன் தினம் தென்கொரியா சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபரிடம் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள ஒரு கூட்டத்தில் மோடி பேசிய ஒரு கருத்து வெளிநாட்டு இந்தியர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு டுவிட்டர் மூலம் தங்கள் கண்டனங்களை வெளிநாட்டு இந்தியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சியோலில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, ‘முன்பெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களைத்தான் நான் பார்த்தேன். கடந்த ஓராண்டாக, இந்தியர்களாக தங்களை பெருமிதத்துடன் பார்க்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை நான் செல்லும் வெளிநாடுகளில் பார்க்கிறேன்” என்று கூறினார். பிரதமரின் இந்தப் பேச்சு, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமருக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்காக டுவிட்டரில் #ModiInsultsIndia என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அது உலக அளவில் டிரெண்டிலும் நேற்று வந்தது.
பிரதமருக்கு கண்டனம் தெரிவித்து வந்த ஆயிரக்கணக்கான டுவீட்களில் ஒருசிலவற்றை தற்போது பார்ப்போம்:.
janakiraman @periyakulam – காக்கையால் குயில் போல பாட முடியாது. தவறான சிந்தனை கொண்டவரால் இனிமையான வார்த்தைகளை பேச முடியாது.
कोमल 🙂 @Komal_Indian – பிரதமர் பதவிக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால் சுய துதிபாடல் பாடும் ஒருவரால் நாட்டுக்கு எந்த பெருமையும் இல்லை. மன்னியுங்கள் மோடி.
Jothimani @jothims – ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்து இந்தியாவை காப்பாற்றினார்கள். இந்தியா என்பது பல கோடி மக்கள் மற்றும் மிகச் சிறந்த தலைவர்களின் உழைப்பு மற்றும் கனவினால் உருவானது. நீங்கள் எங்களை அவமதிக்காதீர்கள்.
नवेन्दु @NavenduSingh_ – இந்தியனாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். வருத்தம் என்னவென்றால் நாட்டின் 31% மக்கள் உங்களை பிரதமராக தேர்வு செய்ததுதான்.
Arun Nambiar @aruns_nambiar – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜியார்ஜ் புஷ், இத்தாலி நாட்டின் பெர்லுஸ்கோனி ஆகியோர் தங்களது நாட்டு மக்களை அவமதித்தது போலதான் இதுவும். நாங்கள் இதையும் கடந்து வருவோம்.
FreedomFighterz @PuliArason – டியர் @narendramodi உங்களுக்கு உலகம் முழுவதும் சுற்ற வேண்டுமென்றால் சுற்றுங்கள். உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள். நிறைய பேசுங்கள். ஆனால் எங்களை அவமதிக்காதீர்கள்.
WithRG @withRG – ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்தாலும் வியர்வை துளியாலும் ஆனது தான் இந்தியா. வெளிநாட்டுக்கு சென்ற பிரதமர் இப்படி பேசி இருப்பது வருத்தமளிக்கிறது.
Saloni @Saloni_shines – இந்தியாவால் வெட்கப்படுகிறார் பிரதமர். அதனால் தான் வெளிநாடுகளிலேயே பிரதமர் உள்ளார். கூகுள் தரும் தகவலை பாருங்கள்.
Dr.Nitibhushansingh @Nitinchandel1 – #ModiInsultsIndia செல்ஃபி எடுக்கவும் செல்ஃபிஷாக பேசவும் மட்டுமே நீங்கள் உள்ளீர்கள். அதனால் தான் நீங்கள் இந்தியாவை அவமதிக்கிறீர்கள். இந்தியா என்பது என்றுமே எப்போதுமே பெருமைக்குரியது தான்.
Neil @humanbeing2014 – இந்த ட்ரெண்டுக்கு பதிலாக நாம் அனைவரும் #ModiDontComeBack இதனை ட்ரெண்ட் செய்ய வேண்டும்.
Pee Politics 🙂 @VAvinash – #ModiInsultsIndia. யாராவது மோடியிடம் கூற வேண்டும். தேர்தல் முடிந்துவிட்டது. அவர் பிரதமராகி ஒரு வருடமாகிறது. வெத்து வெற்றி பேச்சு போதும். கொஞ்சம் ஏதேனும் வேலை இருந்தால் பாருஙக்ள்.
JoginderRawat @joginderrawat – வெளிநாட்டு சென்று நம்மை அவமதித்த முதல் பிரதமர் மோடி தான். இந்தியர்கள் இந்தியர்களாக இருப்பதில் என்றுமே பெருமிதம் கொள்வார்கள்.
Syed Ahmar @SM_Ahmar – இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்படும் மோடி மற்றும் அவரது பக்தர்கள் நாட்டைவிட்டே வெளியேறலாம். நாங்கள் உங்களை எங்கள் நாட்டில் வைத்துக்கொள்வதை அவமதிப்பாக கருதுகிறோம்.
Mohammed Meeran @meerane – எந்த கட்சி நாட்டை ஆட்சி செய்தாலும் நாங்கள் இந்தியாவை நேசிப்போம் மோடி அவர்களே.
Manoj Kumar Sahu @ManojSahuG – பிரிட்டிஷ் இந்தியாவுக்கு பின்னர் இந்தியாவை குண்டர்களும் முட்டாள்களுமே ஆட்சி செய்வார்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார். அவர் இந்த மோடி சர்க்காரை தான் குறிப்பிட்டார் போலும்.
Vinod Mehta @DrunkVinodMehta – 125 கோடி இந்தியர்களின் மனநிலையும் ஒன்றுதான். மோடி ஆட்சி எப்போதும் முடியும், இந்தியாவின் பிரதமராக இருக்க பெருமை கொள்ளும் ஒருவரை எப்போது தேர்ந்தெடுக்கலாம் என்று அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்.
அகிலன் கார்த்திகேயன் @akilankg – மோடியை எதிர்ப்பவர் எதிர் தேசியவாதிகள், இந்தியாவை கீழ்மைப்படுத்தி பேசும் மோடியை ஆதரித்தால் தேசியவாதிகள். ### சரிதான்!!! #ModiInsultsIndia