நேபாள தலைநகர் காட்மண்டுவில் அடுத்த வாரம் 26, 27–ந்தேதிகளில் 2 நாட்கள் சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 25–ந்தேதி நேபாளத்துக்கு செல்கிறார்.
நேபாள சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி ஜனக்பூர் மற்றும் லும்பினி நகரங்களில் பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டிருந்தார். இதில் ஜனக்பூர் சீதை பிறந்த ஊராகும். அது போல லும்பினி கவுதம புத்தர் பிறந்த ஊராகும்.
இந்த இரு புனித நகரங்களிலும் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர பொதுக்கூட்டங்களில் பேசி முடித்ததும் நேபாளத்தை சேர்ந்த ஏழைகளுக்கு இலவச சைக்கிள்கள் கொடுக்கவும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சிகளுக்கு நேபாளத்தில் உள்ள சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக நேபாள மாவோயிஸ்ட் கட்சியினர், இந்திய பிரதமர் நேபாளத்தில் உள்ளவர்களுக்கு சைக்கிள் கொடுப்பதை விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தங்கள் எதிர்ப்பை மீறி ஜனக்பூர் வந்தால் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து நேபாள அரசும் பிரதமர் மோடி ஜனக்பூர் செல்வதை விரும்பவில்லை என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேபாள பயணத்தின் போது சீதை பிறந்த ஊரான ஜனக்பூருக்கு செல்ல மாட்டார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை நேபாள மந்திரி பிமலேந்திர நிதி உறுதி செய்தார்.