எகிப்து நாட்டின் சட்டதிட்டத்தின்படி முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரை பெற்ற முன்னாள் அதிபர் முகமது முர்சிக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எகிப்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத்.
முகமது முர்சியின் பிரிவினைவாத கொள்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்தனர். அதிபர் மாளிகைக்கு முன்பும் அதிபருக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களை தனது ஆதரவாளர்களை கொண்டே முகமது முர்சி விரட்டி அடித்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு ராணுவம் இவரை பதவியில் இருந்து தூக்கி எறிந்தது.
இதேபோல், 2011ஆம் ஆண்டு எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராகவும் முகமது முர்சி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். அப்போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த முர்சியின் ஆதரவர்கள் தப்பிச் செல்ல அவர் உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தது.
இந்நிலையில், 2012-ம் ஆண்டு முர்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை தனது ஆதரவாளர்களை வைத்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முர்சிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையை உடைத்து தனது ஆதரவாளர்கள் தப்பிக்க உதவியதாக முகமது முர்சி மீது தொடரப்பட்ட வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், முர்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபான் அல் ஷமி தீர்ப்பு அளித்துள்ளார்.