ஃபேஸ்புக்கில் இனி பணமும் பகிரலாம் பாதுகாப்புடன்!

fb_bank_2346400f

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யக் கூடிய புதிய வழியை ஃபேஸ்புக் விரைவில் கொண்டு வருகிறது.

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலில் இந்த வசதியை பயனாளிகள் பெற, அவர்கள் தங்களது வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட டெபிட் கார்டு எண்ணை ஃபேஸ்புக் கணக்கோடு பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் நண்பர்களுடன் சாட் செய்யும்போதே கூட, மெசஜ் பாக்ஸில் உள்ள $ பட்டனை அழுத்தி, அதில் தொகையைக் குறிப்பிட்டு, சென்ட் பட்டனை அழுத்தி பணத்தை அனுப்பலாம், இதே வழிமுறையில் பணத்தைப் பெற்றும் கொள்ளலாம்.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறும்போது, “பணப் பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், பயனாளிகளின் வங்கி விவரங்களை ரகசியமாகவும் வைத்துக்கொள்ள உயர்ந்த தொழில் தரத்துடனான பாதுகாப்பு மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு மோசடி எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் பணம் உடனடியாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டாலும், அதனை எடுப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும்.

ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள், டெஸ்க்டாப் கணினிகளிலும் முதலில் இந்த வசதி செயல்படும். ஆனால், இந்த புதிய வசதி அமெரிக்க ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு மட்டுமே முதலில் செயல்படுத்தப்படவுள்ளது. பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த 2007 முதல் தினமும் தங்களது விளம்பரதாரர்களோடு 10 லட்சம் எண்ணிக்கையிலான பணப் பரிவர்த்தனைகளை இந்த முறையில் செய்து வருவதால், இது பாதுகாப்பான வழிமுறைதான் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply