உள்ளாட்சி தேர்தலிலும் பணம் தான் நாயகன். திமுக-அதிமுக போட்டி போட்டு செலவழிக்க முடிவு?
சமீபத்தில நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட திமுக, வரும் உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான மாநகராட்சி, நகராட்சிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கட்சியில் இருந்து தேர்தல் நிதி வராததே தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என கட்சியினர்களிடையே கருத்து கூறப்பட்ட நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு 75 சதவீதம் பணம் வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பணம் செலவு செய்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதாக ஊடக செய்திகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் அதைவிட அதிக அளவில் தேர்தலின் முடிவை பணமே உறுதி செய்யும் என கூறப்படுகிறது.
எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் தாராளமாக செலவு செய்ய திமுக மேலிடம் உத்தரவிட்டதாகவும், இதன்காரணமாக திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் இப்போதே களப்பணியில் இறங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சியும் பணம் செலவு செய்வதில் சளைத்த கட்சி அல்ல என்பதால் வரும் உள்ளாட்சி தேர்தல் பெரும் விறுவிறுப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.