இணையதளம் மூலம் ‘மணியார்டர்’ அனுப்பும் சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வசதியை தபால் துறையில் கொண்டு வருவதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்து தபால் நிலையங்களிலும் இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தபால் அலுவலக சேவைகள் விரைவு படுத்தப்பட்டன.
குறிப்பாக 135 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த மணியார்டர் அனுப்பும் பழைய முறை முடிவுக்கு வந்தது. தற்போது இணையதளம் மூலம் ‘மணியார்டர்’ அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்ட புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில்,
160 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த தந்தி சேவையை கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது தபால் நிலையங்களில் ‘மணியார்டர்’ சேவையும் நிறுத்தப்பட்டதாக பரப்பப்பட்ட தகவல் தவறானதாகும். விரைவான சேவைக்கு இணையதள உதவியுடன் ‘மணியார்டர்’ அனுப்பும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதைய முறையில் இணையதளம் மூலம் நாம் அனுப்பும் பணத்துடன், கூறவேண்டிய தகவல்கள் சுருக்கமாக, கணினியில் நகல் எடுக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு மறுநாளே விநியோகம் செய்யப்படும். பழைய முறை தற்போது நடைமுறையில் இல்லை.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் மட்டும் 12 லட்சத்து 70 ஆயிரம் மணியார்டர்கள் கையாளப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வு ஊதிய தொகைகள் அதிகளவு ‘மணியார்டர்’ மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இன்ஸ்டன்ட் மணியார்டர் எனும் பிரிவின் மூலம் குறிபிட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் வரை அனுப்ப முடியும். இந்த முறையில் தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு 16 இலக்க எண் வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறும், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று 16 இலக்க எண்ணுடன், இருப்பிட சான்று நகலையும் காட்டி தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ரூ.50 ஆயிரம் அனுப்புவதற்கு கமிஷனாக ரூ.120 வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2013-2014 ஆம் ஆண்டு தமிழத்தில் உள்ள 12 ஆயிரம் தபால் நிலையங்கள் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பில் ‘மணியார்டர்’கள் கையாளப்பட்டு உள்ளன. ‘மணியார்டர் விதேஷ்’ என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் முறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.