பிரபல சமூக இணையதளமான ஃபேஸ்புக் பொழுதுபோக்கு மற்றும் சமூக பிரச்சனைகளை அலசுவதற்கு மட்டுமின்றி பணம் அனுப்பவும் உதவும் வகையில் புதிய வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆப்ஸ் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யக் கூடிய புதிய வழியை ஃபேஸ்புக் விரைவில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது
ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆப்ஸில் இந்த வசதியை பயனாளிகள் பெற, அவர்கள் தங்களது வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட டெபிட் கார்டு எண்ணை ஃபேஸ்புக் கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் நண்பர்களுடன் சாட்டிங் செய்யும்போது, மெசஜ் பாக்ஸில் உள்ள $ பட்டனை அழுத்தி, அதில் தொகையைக் குறிப்பிட்டு, சென்ட்(send) பட்டனை அழுத்தினால் நாம் யாருக்கு பணம் அனுப்பவேண்டுமோ அவருக்கு மிக எளிதாக அனுப்பிவிடலாம். இதே வழிமுறையில் பணத்தைப் பெற்றும் கொள்ளவும் முடியும்.
இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறும்போது, “பணப் பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், பயனாளிகளின் வங்கி விவரங்களை ரகசியமாகவும் வைத்துக்கொள்ள உயர்ந்த தொழில் தரத்துடனான பாதுகாப்பு சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் வசதிகள் சோதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக சிறப்பு மோசடி எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் பணம் உடனடியாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டாலும், அதனை எடுப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும்.
ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள், டெஸ்க்டாப் கணினிகளிலும் முதலில் இந்த வசதி செயல்படும். ஆனால், இந்த புதிய வசதி அமெரிக்க ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு மட்டுமே முதலில் செயல்படுத்தப்படவுள்ளது. பின்னர், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.