அக்டோபர் 8 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அன்று காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை அடைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் கோளரங்கக் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் குப்த் இந்த சந்திர கிரகணம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில்”அக்டோபர் 8ஆம் தேதி அன்று நிகழும் சந்திரகிரகணம் மதியம் 2.44 மணிக்கு தொடங்கி மாலை 6.04 மணி வரை நீடிக்கும் என்றும் இந்த சந்திர கிரகணத்தில், நிலவு முழுமையாக மறையும் நிகழ்வு 23 நிமிடங்கள் வரை இருக்கும் என்று கூறினார்.
மேலும் இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்குப் பகுதிகளான திரிபுரா, இம்பால், கோஹிமா ஆகிய பகுதிகளில் இருந்து தெளிவாக பார்க்க முடியும் என்றும் இந்த கிரகணம் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் என்றும் கூறினார்.
சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவை முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
கிரகண நேரத்தில் ஆன்மிகக் காரணங்களுக்காக திருப்பதி கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 8ம் தேதி 9.30 மணி வரை பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் கோயிலுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைவரும் கோயிலில் இருந்து வெளியேறி, கோயில் நடை காலை 10.30 மணிக்கு அடைக்கப்படும். இரவு 8 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.
பிறகு கோயில் நடை திறக்கப்பட்டு, அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் மட்டும் சென்று உரிய பூஜைகளை செய்த பிறகு, இரவு 10.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.