சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் மினிபஸ் எனப்படும் சிற்றுந்துகள் வெற்றிகரமாக இயங்கி வருகிறாது. மாநகர பேருந்துகள் செல்ல முடியாத இடங்களில் இந்த சிற்றுந்துகள் சென்றுவருவதால் பொதுமக்கள் பெருமளவு பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய மேலும் 100 மினிபஸ்கள் இயக்கப்படும் என்று அவர் இன்று சட்டசபையில் தெரிவித்தார். ரூ.16 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் மேலும் 100 மினிபஸ்கள் விரைவில் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், “சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 100 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு சென்னை மாநகர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும், மேலும் 100 புதிய சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும்.