உலகின் மிகப்பெரிய கால்நடை பலிகொடுக்கும் திருவிழா நேபாளம் நாட்டில் நேற்று தொடங்கியது. மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் சுமார் 5 லட்சம் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் வெட்டப்பட உள்ளன.
நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற கதிமாய் அம்மன் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய கால்நடை பலி கொடுக்கும் திருவிழா பிரமாண்டமாக நடைபெறும் வழக்கம் உண்டு. இரண்டு நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று முதல் தொடங்கியது. பன்றி, புறா, வாத்து, சேவல், எலி ஆகிய உயிரினங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்றை பலியிட்டு இந்த பலி விழாவை அந்த கோவிலின் பூசாரி நேற்று தொடங்கிவைத்தார்.
இதையடுத்து நேற்றும் இன்றும் சுமார் 5 லட்சம் கால்நடைகள் பலிகொடுக்கப்பட உள்ளன. இதில் எருமைகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பலி கொடுக்கும் திருவிழாவுக்கு இந்தியாவில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும் பிஹாரில் இருந்து ஏராளமான கால்நடைகள் ரகசியமாக எல்லை தாண்டி கொண்டு செல்வதாக தகவல்கள் கூறுகின்றன. கிட்டத்தட்ட கோயிலில் பலியிடப்படும் 70 சதவீத கால்நடைகள் இந்தியாவில் இருந்துதான் கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
இதனிடையே கதிமாய் கோயிலின் பலி திருவிழாவுக்கு பிராணிகள் நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறியபோது, சிலரின் வணிக நோக்கத்துக்காக 5 லட்சம் கால்நடைகள் பலியாவது துரதிருஷ்டவசமானது என்று குற்றம்சாட்டினர். கோயில் பக்தர்களுக்கும் பிராணிகள் நல அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க பரியபூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.