எல்லா நேரமும் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பேசுவதும் உளவியல் ரீதியாக ஒருவரைப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி ஹெட் போனோடு திரிபவர்களுக்குக் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படவும், தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தங்க ஆரம்பிக்கும். அது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பையும் நமைச்சலையும் தரும். அதுபோன்ற வேளைகளில் ‘பட்ஸ்’ பயன்படுத்தும்போது காது புண்ணாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்துபவர்களுக்கு கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கும், காதுக்குள் இரைச்சல் கேட்கும். அதிக அதிர்வினால் செவி மடலும் பாதிப்படையும். காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்கும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதோடு நாளடைவில் காது கேட்கும் திறன் முற்றிலுமாக பழுதாகும்.
இதைக் குணமாக்க சிகிச்சை முறைகளே கிடையாது. சிலருக்கு ஹெட்செட்டைக் கழட்டிய பிறகும் காதுகளில் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும், ரிங்டோன் ஒலிப்பது போலவும் தோன்றும். இது தொடர்ந்தால் நாளடைவில் ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்’ எனும் மன வியாதிக்கு ஆளாகிவிடுவார்கள்.
கால் சென்டரில் வேலைச் செய்பவர்களுக்கும் இது அதிகமாக ஏற்படும். தொடர்ந்து ஹெட்செட் பயன்படுத்துவதால் மூளையின் செயல்திறன் குறையத் தொடங்கும். எந்நேரமும் பாடல் கேட்கும்போது இயல்பாக மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் செயல் பாதிப்படையும்.