ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவும், மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே பிரிவினைவாத அமைப்பின் தலைவர் மஸ்ரத் ஆலம் விடுதலை தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிவினைவாத தலைவர் ஆலம் விடுதலைக்கு பாஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜுகல் கிஷோர் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரிவினைவாத அமைப்பின் தலைவரான மஸ்ரத் ஆலமை விடுதலை செய்வதற்கு முன்பாக, கூட்டணிக் கட்சி என்ற முறையில் எங்களது அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து மஜக எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. இதை சகித்துக்கொள்ள முடியாது. இது குறித்து விளக்கம் கேட்கப்படும்.
எங்களது ஆலோசனையைக் கேட்டிருந்தால் அதற்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம். இப்போதும் அவர்களது முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாட்டுக்கு எதிராக நஞ்சை கக்கும் ஆலம் போன்றவர்களை வெளியில் விட்டிருக்கக் கூடாது. இவர்களை நிபந்தனையின்றி வெளி யில் விட்டால் மீண்டும் பிரிவினை வாதத்தை வலியுறுத்தி முழக்க மிடுவார்கள்.
இந்த பிரச்சினை, கூட்டணி அரசை நடத்துவதற்கான அடிப்படையாக உள்ள குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் இடம்பெறவில்லை. எனவே, இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து பாஜக அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு எங்களது நிலைப்பாடு குறித்து மஜகவுக்கு தெரிவிக்கப்படும். யாரையும் சார்ந்து பாஜக இல்லை. மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் மஜகவுடன் பாஜக கைகோர்த்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பாடு படுவோம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதுகுறித்து பேசி தீர்வு காண்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரிவினைவாத அமைப்பின் தலைவர் மஸ்ரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.