பிரதமருடன் திடீர் மோதல். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் ராஜினாமா
இஸ்ரேல் நாட்டின் பிரதமர் மற்றும் ராணுவ மந்திரி ஆகியோர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு முற்றியதால் ராணுவ மந்திரி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்நாட்டில் அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மந்திரிசபையை மாற்ற விரும்பினார். குறிப்பாக ராணுவ மந்திரியாக அவர் வேறொருவரை மாற்ற விரும்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராணுவ மந்திரி மோஷே யாலோன் அவர்களுக்கும் பிரதமருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: “சமீபத்திய நடவடிக்கைகளால் பிரதமர் மீதான நம்பிக்கையை நான் இழந்துள்ள தருணத்தில், மந்திரி பதவியில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக பிரதமரிடம் கூறி விட்டேன். அரசியலில் இருந்தும் விலக போகிறேன்’ என்று கூறியுள்ளார்.