‘பனாமா லீக்ஸ்’ ரகசியங்களை கசிய விட்ட ஐ.டி.ஊழியர் கைது
கடந்த ஏப்ரல் மாதம் ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கசிந்த தகவல்கள் காரணமாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவின் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் உள்பட உலகின் ஏராளமான பிரபலங்களின் பெயர்கள் வரி ஏய்ப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து செய்யப்பட்ட விசாரணையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளை சேர்ந்த கோடீசுவரர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். இது குறித்த சட்ட ஆவணங்களை, பனாமாவில் இயங்கி வரும் ‘மொசாக் பொன்சேகா’ என்ற சர்வதேச நிறுவனம் பாதுகாத்து வந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்த ஆவணங்கள் பனாமா லீக்ஸ் என்ற பெயரில் லீக் ஆகியது
இந்த விவகாரத்தால் கடும் அதிர்ச்சியடைந்த மொசாக் பொன்சேகா நிறுவனம் உடனடியாக தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெனீவாவில் இயங்கி வரும் மெசாக் பொன்சேகா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். பெரும் எண்ணிக்கையிலான நம்பகமான ஆவணங்களை கசியவிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சுவிட்சர்லாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.