விமான விபத்தில் சிக்கிய இளம்பெண் ஒரு வயது குழந்தையுடன் காயமின்றி மீட்பு
சென்னை அருகே கடற்படைக்கு சொந்தமான சிறியரக விமானம் ஒன்று காணாமல் போனதை அடுத்து, அந்த விமானத்தை தேடும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதேபோன்று தென் அமெரிக்கா நாடான கொலம்பியா என்ற நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணும் அவருடைய ஒருவயது குழந்தையும் ஐந்து நாட்களுக்கு பின்னர் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
கொலம்பியா நாட்டில் உள்ள சோகோவின் குயிப்டோ என்ற இடத்திலிருந்து நுகுய் என்ற இடத்திற்கு பசிபிக் கடல் வழியாக ஒரு குட்டி விமானம் கடந்த வாரம் பறந்து சென்றது. அந்த விமானம் அல்டோ பவுடோ என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது கடந்த சனிக்கிழமை திடீரென விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தை கர்லோஸ் மரியோ செபல்லோஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார். இதில் மரியா நெல்லி முரில்லோ என்ற 18 வயது இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் பயணம் செய்தார். இரண்டு என்ஜின் கொண்ட இந்த விமானம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்ததால் அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணி கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று விமானத்தில் விமானி காக்பிட் பகுதியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதே விமானத்தில் பயணம் செய்த மரியா நெல்லி முரில்லோ சிறிய காயத்துடன் உயிருடன் இருந்ததை கண்டுபிடித்த மீட்புப்படையினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மீட்புக்குழு அதிகாரி கூறுகையில் ‘‘அடர்ந்த காட்டுக்குள் விமானம் நொறுங்கி விமான பலியாகியுள்ள நிலையில் இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் உயிர் பிழைத்திருப்பது அதிசயம்’’ என்று கூறியுள்ளார்.